மனமே கோவில்! மனிதனே தேவன்!
- உடலில் ரத்தம்
ஓடவேண்டும் என்பதுதான்
இறைவன் நமக்கு
இட்ட கட்டளை!
தெருவில் அதனை
ஓட விடுவது
தெய்வ நிந்தனை!
நீங்கள்
தெரிந்து கொள்ளுங்கள்...
திரிகள் மட்டுமே
கருகிக் கொண்டிருக்கின்றன...
தூண்டு கோல்கள்
சுகமாகத்
தூங்குகின்றன!
அவரவர் மதக்கொடிகள்
அசையட்டும் அழகாய்...
வெறியெனும் நெருப்புக்கு
விசிறியாய் அல்ல-
களைத்தவர் வாழ்விற்குக்
கலங்கரை விளக்கமாய்!
சிறகுகள்
பறவைகள்
பறக்கிறதென்றா
சொல்கிறீர்கள்?
இல்லை
காற்றில் படிந்துள்ள
தூசியைச் சிறகால்
துடைத்து விடுகின்றன!
வெய்யிலில் புழுங்கும்
மேகக் குழந்தைகளுக்கு
விசிறி வீசுகின்றன.
கூண்டுகளுக்குள்ளே
குறுகி விடாமல்
சிறகுகள்
விசும்பிக் கொண்டு
விண்ணெழும் போதுதான்
ஆகாயம் மகிழ்ந்து
அகலமாகிறது!
பகல் ஒரு பைத்தியம்
பகல் ஒரு பைத்தியம்...
உள்ளதையெல்லாம்
உளறிக் கொட்டுகிறது!
இரவு ஒரு ரகசியம்...
எல்லாவற்றையும்
மூடி மறைக்கிறது!
மனிதனே...
கையை விரித்துக்
காட்டுகிறாய்...
உள்ளே
ஒன்றுமே இல்லை...
ஒப்புக் கொள்கிறேன்!
ஆனாலும்
அடுத்தவரைத்
தூக்கிவிட இரண்டு
தோள்கள் இருக்கிறதே...
உள்ளம் ஒரு வெள்ளைத்தாள்
வெள்ளைத் தாளாய்
இருந்தது என்
இதயம்!
எதை எதையோ
நீ தான்
எழுதினாய்...
ஒரு நாள்-
எழுதியதையெல்லாம்
நீயே அழித்து விட்டாய்...
அழித்தது சரி!
எழுதியது
நீ
என்பதால்
அழித்தது சரி...
இதயத்தைக்
கிழித்தது சரியா?
கிரீடமே கேள்
மகுடமே உனக்கு
மரியாதை அதிகம்தான்...
சிலர் உன்னைக்
காப்பாற்ற வேண்டுமே
என்று
கவலைப் படுகிறார்கள்...
சிலர் உன்னைக்
கைப்பற்ற வேண்டுமே
என்று கவலைப்படுகிறார்கள் ...
தொலைக்காட்சியை நோக்கித்
தொழுகை நடத்துவோம்!
அதுதான்
தன்னை உணர்ந்து
தடங்கலுக்கு வருந்துகிறது!
எந்த நாட்டிலாவது
எந்தத் தலைவனாவது
தேசத்தின் வளர்ச்சிக்குத்
தன்னால் நேர்ந்த
தடங்கலுக்கு
வருந்தியிருக்கிறானா?
தொலைக்காட்சியை நோக்கித்
தொழுகை நடத்துவோம்!
தொலைந்த முகவரியைத்
தோண்டி எடுக்கிறேன்
என்னுடைய பெயரை
நானே படிக்கிறேன்.
என்பெயர் தமிழன்
என்இனம் தமிழினம்!
என்மொழி தமிழ்மொழி!
என்வழி தமிழ்வழி!

கருத்துகள்
கருத்துரையிடுக