அதன் பின் ஒருவர், 'எங்களுக்குத் தன்னையறிதலைப் பற்றிச் சொல்லுங்கள்' என்றார் . அவர் சொல்லத் தொடங்கினார்: உங்கள் இதயம் தன் அமைதியினால், பகல் இரவு ஆகியவற்றின் மறைபொருளை அறியவல்லது. ஆனால் உங்கள் காதுகளோ, அறிவின் இதய ஓலத்தைக் கேட்கத் தாகங் கொண்டனவாக இருக்கின்றன. நீங்கள் எவற்றை உங்கள் நினைவாற்றலால் அறிந்துள்ளீர்களோ, அவற்றைச் சொற்களால் நீங்கள் அறியமுடியும். உங்கள் கனவின் (ஆடை) போர்வையற்ற உடல்களை உங்கள் விரல்களால் நீங்கள் தொடமுடியும். உங்களால் இப்படி இயல்வது நல்லதே! உங்கள் ஆத்மாவினுள் மறைந்துள்ள நீர் ஊற்று, மேலே பொங்கி வழிந்து, கடலை நோக்கி இன்னிசையோடு ஓட வேண்டும். அப்போதே உங்களுடைய, எல்லையற்ற ஆழ்ந்த கருத்தின் பெருநிதியம் உங்கள் கண்களுக்கு விளக்கமுறும். அனால், உங்களுக்குப் புலப்படாத அப் பெருநிதியத்தைச் சீர்தூக்க எந்த துலாக்கோலையும் நீங்கள் தேட வேண்டா. உங்கள் அறிவாற்றலின் ஆழத்தை அளந்தறியத்தக்க க...