ஆல்மித்ரா பின்னர் அவரை நோக்கி, 'நாங்கள் இப்போது மரணத்தைப்பற்றி விளக்கங் கேட்கிறோம்' என, அவர் சொல்வார்: மரணத்தின் இரகசியத்தை நீங்கள் அறிய வேண்டும். ஆனால், வாழ்க்கையின் இதயத்திலே தேடினால் அன்றி, நீங்கள் அதை எவ்வண்ணம் காண இயலும்? இரவில் மட்டுமே காணக் கண் படைத்திட்ட ஆந்தை, பகலில் காண இயலாததால் ஒளியின் தத்துவத்தை அஃது அறிய முடியாது. உண்மையாகவே மரணத்தின் ஆற்றலை நீங்கள் காண விரும்பினால் உங்கள் வாழ்வின் பரு உடலைக் காண, இதயத்தை நன்கு திறந்து விடுங்கள். ஏனெனில், வாழ்வும் மரணமும் நதியும் கடலும் போல் ஒன்றேயாகும். உங்கள் நம்பிக்கை, ஆசை இவற்றின் ஆழத்திலே எட்டாத் தொலைவின் மௌன அறிவு தங்கியுள்ளது. பனிப்படலத்தின் கீழே நிலத்தின் அடியில் புதைந்துள்ள ஒரு விதை கனவு காண்பதைப் போல, உங்கள் இதயம் வசந்தத்தைப் பற்றிக் கனவு காண்கிறது. கனவுகளை நம்புங்கள். ஏனெனில், அவற்றிலே தான் மோட்சத்தின் வாயில் அமைந்திருக்கிறது. மரணத்துக்கு நீங்கள் அஞ்சி நடுங்குதல் கௌரவத்தின் அடையாளமாகத...