அடுத்தபடி ஒரு மடந்தை அவரை நோக்கி 'ஐயா! இன்பத்தைப் பற்றியும் துன்பத்தைப் பற்றியும் எமக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்வார்: உங்களது இன்பங்கள் யாவும் முகத்திரை களையப்பட்ட துன்பங்களே. உங்களது இதயத்தின் நிறைவினின்று எது உங்கள் சிரிப்புக்கும் களிப்புக்கும் காரணமாக இருந்ததோ அதுவே உங்கள் கண்களைக் கண்ணீரால் நிறைக்கவும் காரணமாகலாம். மற்று வேறெப்படி இருக்க முடியும்? துன்பம் உங்கள் உள்ளத்தின் எவ்வளவு அடி ஆழத்தில் உளைகின்றதோ அவ்வளவுக்கு அதிகமான இன்பத்தை நீங்கள் அடைகின்றீர்கள். நீங்கள் பழரசத்தை ஏந்திப் பருகும் அந்தக் குவளை, குயவனாள் சூளையிலே வேகவைத்து எடுக்கப்பட்டது அன்றோ? உங்கள் இதயத்தை இன்னிசையால் பரவசப் படுத்தும் அந்த வேய்ங்குழல் கத்தியால் வெட்டிச் சீவி, துளையிட்டுச் செப்பஞ் செய்யப்பட்டது தானே? நீங்கள் மகிழ்ச்சியில் மைந்துறும் போது உங்கள்...