அப்பாக்கள் செய்யும் இரண்டாம் தவறு இது. மென்மையை நீங்கள் கற்பிக்கிறீர்கள். பெண்களின் செருப்பைக்கூட வடிவமைக்கிறீர்கள். பதினாறு வயதுக்கு மேலும் பலூன் வாங்கி வருகிறீர்கள். சில்லென்று முளைக்கும் சிறகுகளைக்கூட வேண்டாத ரோமங்களென்று வெட்டி விடுகிறீர்கள். அதனால்தான் காற்று கடுமையாக அடித்தாலே பல பெண்களுக்கு ரத்தம் கசிந்துவிடுகிறது. ஒன்று சொல்கிறேன் உங்களுக்கு. என் உயிரின் கடைசிச்சொட்டுவரை அவள்தான் நிறைந்திருக்கிறாள். என் நீண்ட பயணத்திற்குத் தகுதியாக அவளைத் தயாரிக்க வேண்டும். அவள் உங்களுக்குத் தகுதி இல்லாதவளா? அப்படியில்லை அன்பில்-குணத்தில்- காதலில் அவள் என்னிலும் மிக்கவள். ஆனால், என் வாழ்க்கைக்குத் தயாராய் அவள் இன்னும் வார்க்கப்படவில்லை. என்னுடையது புயல்யாத்திரை. அவள் பூஜையறைக் குத்துவிளக்கு. அணைந்து போகாமலிருப்பது எப்படி என்பதைச் சுடருக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும். ........... நம் வாழ்க்கை முறை உடம்பை வாழையாய் வளர்த்துவிட்டது. மெல்லியதோலில் மனதைக் கோழையாய் வளர்த்துவிட்டது. உடம்புக்கும் மனதுக்கும் ஒருமைப்பாடு இல்லை. ச...