பின்னர் ஒரு வழக்கறிஞர், 'ஐயா! அப்படியாயின் நம் சட்டங் களைப் பற்றிய தங்கள் கருத்து யாது?' என, அவர் சொல்லத் தொடங்கினார்: நீங்கள் சட்டங்களை இயற்றுவதிலே இன்பங் காண்கின்றீர்கள். ஆனால், அவற்றைச் சிதைப்பதிலே தான் அதைவிட இன்பத்தைக் காண்கின்றீர்கள். உங்கள் செயலோ, கடற்கரையிலே குழந்தைகள் உறுதியுடன் மணல் வீடுகளைக் கட்டிப் பின் சிரிப்பலையுடனே, அவற்றை அழித்தலைப் போன்றதே ஆகும். ஆனால், நீங்கள் மணல் வீடுகளைக் கட்டும்போது கடல் மேலும் மேலும் மணலைக் கொணர்ந்து குவிக்க, நீங்கள் அவற்றை அழிக்கும் போது கடலும் உங்களுடனே சேர்ந்து பிரிக்கின்றது. உண்மையாகவே கடல் களங்கம் அற்றவர்களுடனே கூடிச் சிரிக்கின்றது. எவருக்கு வாழ்க்கை ஒரு கடல் அல்லாமலும், மனிதனால் செய்யப்பட்ட சட்டங்கள் மணல் வீடுகளைப் போல் அல்லாமலும் உள்ளதோ? எவருக்குப் பாறையே தம் வாழ்க்கையாகவும், அப்பாறை மீது தாம் விரும்பியபடி செதுக்கிக் கொள்ளத்தக்க சிற்றுளியே சட்டமாகவும் உள்ளதோ அவர்கள...