திருமணம் நீங்கள் அனைவரும் இணைந்தே பிறந்தீர்கள். இனி எப்போதும் இணைந்தே இருப்பீர்கள். உங்களுடைய வாழ்நாள்களை மரணம் தன் வெண் சிறகுகளால் சிதற அடிக்கும் காலத்தும் இணைந்தே இருப்பீர்கள். ஆம், இறைவனுக்கான அமைதி மிக்க தியான நேரத்திலும் நீங்கள் இணைந்தே இருப்பீர்கள். ஆனாலும், உங்கள் இணைப்பின் இடையே சிறிது இடைவெளி இருக்கட்டும். அந்த இடைவெளியிலே வானுலகத்தில் காற்று நடனம் புரியட்டும். ஒருவரை ஒருவர் காதலியுங்கள். ஆனால், அக் காதலினால் பிணிப்பான தளையை உண்டாக்கிக் கொள்ளாதீர்கள். அக் காதல் உங்கள் உயிராற்றங் கரைகளிலே அலை மோதும் கடலாக விளங்கட்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் மற்றொருவருடைய குவளையை நிரப்புங்கள். ஆனால், ஒரே குவளையிலுள்ள பானத்தை இருவரும் பருகாதீர்கள். அதைப்போலவே, தனக்குரியதான உணவையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளுங்கள். ஆனால், ஒரே அப்பத் துண்டின...