ஆங்கிருந்த கோயில் அர்ச்சகரின் மனைவி அவரை நோக்கி, 'ஐய ' பிரார்த்தனையைப் பற்றிச் சற்று விளக்குங்கள்' என்றார் . அவர் சொல்லத் தொடங்கினார். நீங்கள் உங்கள் துயரத்திலும் தேவையிலும் பிரார்த்தனை செய்கின்றீர்கள். உங்கள் மகிழ்ச்சியின் முழுமையிலும் வாழ் நாள்களின் நிறைவிலும் கூட நீங்கள் பிரார்த்திக்க வேண்டுமன்றோ ? ஏனெனில், நிலைத்து வாழ்கின்ற பரவெளியில் உங்கள் உள்ளம் கலக்க வியாபித்தலே பிரார்த்தனை என்பதல்லாமல் வேறென்ன? உங்களுடைய இருளை மட்டும் பரவெளியிலே சொரிந்து விடுவது உங்களுக்குச் சாந்தியைத் தருமானால், உங்கள் இதயத்தின் வைகறையைக் கூட அந்தப் பரவெளியிலே பெய்து விடுவதும் உங்கள் மகிழ்ச்சிக்காகவே பிரார்த்தனைக்காக, உங்கள் ஆத்மா உங்களை அழைக்கும் போது , நீங்கள் அழுவதைத் தவிர்த்து வேறொன்றும் உங்களால் செய்ய முடியாதாயின், நீங்கள் அழ அழ அந்த ஆத்மா, உங்களை நீங்கள் வாய்விட்டுச் சிரிக்கும் வரை, உங்களை மேலும் மேலும் கிசுகிசுத்துத் தூண்டிவிடும். நீங்கள் தியானிக்கும் அந்த நேரத்திலே தியானிக்கும் காலம் தவிர, பிற நேரங்களில் உங்களால் சந்திக்க இயலாதவர்களா...