பிரார்த்தனை

 ஆங்கிருந்த கோயில் அர்ச்சகரின் மனைவி அவரை நோக்கி, 'ஐய ' பிரார்த்தனையைப் பற்றிச் சற்று விளக்குங்கள்' என்றார் .

அவர் சொல்லத் தொடங்கினார்.

    நீங்கள் உங்கள் துயரத்திலும் தேவையிலும் பிரார்த்தனை செய்கின்றீர்கள்.  உங்கள் மகிழ்ச்சியின் முழுமையிலும் வாழ் நாள்களின் நிறைவிலும் கூட நீங்கள் பிரார்த்திக்க வேண்டுமன்றோ ?

    ஏனெனில், நிலைத்து வாழ்கின்ற பரவெளியில் உங்கள் உள்ளம் கலக்க வியாபித்தலே பிரார்த்தனை என்பதல்லாமல் வேறென்ன?

    உங்களுடைய இருளை மட்டும் பரவெளியிலே சொரிந்து விடுவது உங்களுக்குச் சாந்தியைத் தருமானால், உங்கள் இதயத்தின் வைகறையைக் கூட அந்தப் பரவெளியிலே பெய்து விடுவதும் உங்கள் மகிழ்ச்சிக்காகவே பிரார்த்தனைக்காக, உங்கள் ஆத்மா உங்களை அழைக்கும் போது , நீங்கள் அழுவதைத் தவிர்த்து வேறொன்றும் உங்களால் செய்ய முடியாதாயின், நீங்கள் அழ அழ அந்த ஆத்மா, உங்களை நீங்கள் வாய்விட்டுச் சிரிக்கும் வரை, உங்களை மேலும் மேலும் கிசுகிசுத்துத் தூண்டிவிடும்.

    நீங்கள் தியானிக்கும் அந்த நேரத்திலே தியானிக்கும் காலம் தவிர, பிற நேரங்களில் உங்களால் சந்திக்க இயலாதவர்களான பிரார்த்தனை செய்யும் பல்லோரையும், பரவெளியிலே சந்திக்க நீங்கள் மேன்மேல் உயர்கின்றீர்கள்.

    எனவே, கண்ணுக்குப் புலப்படாத அந்தப் பெரிய கோயிலுக்கு நீங்கள் செல்வது. பெருமகிழ்ச்சிக்கும், இனிய ஒருமைப்பாட்டு உணர்வுக்கும் அன்றி, மற்றொன்றுக்கு அன்று என இருக்கட்டும்.

    ஆனால், அப் பெரிய கோயிலுக்கு நீங்கள் செல்வது வரம் கேட்டு இருப்பதற்காக அன்றி வேறெதற்கும் அன்று எனில் நீங்கள் எதையும் அங்குப் பெற முடியாது.

    அதனுள் நீங்கள் நுழைவது உங்களைத் தாழ்மைப்படுத்திக் கொள்ளவே எனில், நீங்கள் மேலுயர்த்தப்பட மாட்டீர்கள்.

    மற்றவர்களின் நன்மைக்காக வேனும் நீங்கள் வரம் கேட்டு இரப்பதற்கு அங்குச் செல்வீர்களாயின், உங்கள் பிரார்த்தனை கேட்கப்பட மாட்டாது.

பிறரால் காணப்படாமல் அக் கோயிலுக்குள் நீங்கள் நுழைவதே நல்லது.

வார்த்தைகளால் நீங்கள் எப்படிப் பிரார்த்தனை செய்வது என்று நான் கூற முடியாது.

    உங்கள் உதடுகள் மூலமாக இறைவனே, வார்த்தைகளை முணு முணுக்க வைக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் இறைவன் உங்கள் பிரார்த்தனைகளைக் கேட்பதில்லை.



    கடல், காடு, மலை இவற்றின் பிரார்த்தனைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தர இயலாது.

    மலை, காடு, கடல் இவற்றிடையே பிறந்த நீங்கள் உங்கள் இதயத்திலே அவற்றின் பிரார்த்தனையைக் காண இயலும்.

    நீங்கள் இரவின் அமைதியிலே கூர்ந்து கவனிப்பீர்களானால், அவை மௌனத்தோடு இவ்வண்ணம் கூறுவதைக் கேட்பீர்கள்.

 'எங்கள் இறைவனே, எமது சிறகுள்ள ஆத்மாவே, எங்களுள் எழும் உணர்வு உமது உணர்வே.

    எங்களுள் எழும் விருப்பங்கள் உமது விருப்பமே.

    'உம்முடைய தாய் எங்கள் இரவுகளை, உம்முடையதான பகலாக மாற்றுவதும் எங்களுள் எழும் உமது தூண்டுதலே.

    'நாங்கள் எதையும் உம்மிடம் கேட்க வேண்டியதே இல்லை. ஏனெனில், எங்களுக்கு எது தேவை என்பதை அவை எங்கள் உள்ளத்தில் தோன்றுவதற்கு முன்னரே நீர் அறிவீர்.

    'எங்களது தேவை பரம் பொருளாகிய நீரே உம்மை மட்டுமே, அதிகமாக எங்களுக்குக் கொடுப்பதன் மூலம் நீர் அனைத்தையும் எங்களுக்குத் தருகிறீர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்