முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாய்மை

     உண்மையே ஞானத்தின் உறைவிடம்.  - பழமொழி 

    உண்மை உரைத்துச் சாத்தானை நாணமடையச் செய்க. -ராபிலே 

    கடவுள் சிருஷ்டிகளின் தலைசிறந்தது சத்திய வந்தனே. - போப் 

    உயர்ந்த உண்மை மலர்வது ஆழ்ந்த அன்பிலேயே . - ஹீன் 

    உண்மையை நாம் அறிவினால் மட்டும் காண்பதில்லை, அன்பினாலும் காண்கிறோம். - பாஸ்கல் 

    உலோபியைப் போல், உள்ளம் நிறைந்த உண்மையும் ஓலைக் குடிசையிலேயே வாழ்கின்றது.- ஷேக்ஸ்பியர் 

    உண்மையின் முகம் அவ்வளவு அழகு தோற்றம், அவ்வளவு கம்பீரம்:- அதைப் பார்த்தால் போதும் நேசியாமல் இருக்க முடியாது. - ட்ரைடன் 

    உலகத்தார் நாடும் பெருமைகள் வேண்டேன்.  உண்மை அறிவதொன்றே என் விருப்பம். - லாக்ரடீஸ் 

    கடவுள் வலது கையில் முழு உண்மையையும், இடது கையில் உண்மையைத் தேடுவதில் அழியா ஆசையையும் வைத்துக்கொண்டு, எது வேண்டும் என்று என்னைக் கேட்டால் - இடது கையில் உள்ளதை விரும்பினால் என்றும் இருட்டிலேயே இருக்க வேண்டியிருப்பினும் - நான் இடது கை முன் தலையைத் தாழ்த்தி, 'தந்தையே தாரும்', உண்மை உமக்கே உரியது'  என்று கூறுவேன்.  ஏனெனில், மனிதன் உண்மையை அடைவதாலன்றி உண்மையைத் தேடுவதாலேயே பரிபூரணத்துவத்தைத் தன்னிடம் இடைவிடாது வளர்த்துக் கொள்வதற்குரிய தன் சக்திகளை விருத்தி செய்து கொள்கிறான். - லெஸ்ஸிங் 

    உண்மையை நேசி.  ஆனால், பிழையை மன்னித்து விடு. - வால்டேர் 

    அன்பு சில குறைகளையும், அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்தா.  ஆனால், உண்மை எந்த அவமானத்தையும் மன்னிக்காது; எந்தக் குறையையும் பொறுக்காது. - ரஸ்கின் 

    உண்மை நாடவே நமக்கு உரிமை ஆண்டவனுக்கே அது உடைமையாகும். - மான்டெய்ன்

    உண்மையை அடைய விரும்பினால் உண்மைக்குரிய வழியில் சிறுகச் சிறுக முன்னேறிச் செல்க. - டாலர் 

    மனிதன் பிறந்துள்ளது உண்மையைத் தேடவே.  ஆனால் அதை அடையும் பாக்கியம் வேறொரு பெரிய சக்திக்கே உண்டு. - மான்டெய்ன் 

    உண்மை பேசல் அழகாய் எழுதுவதை ஒக்கும்.  பழகப் பழகவே கைகூடும்.  ஆசையைவிடப் பழக்கத்தையே பொறுத்ததாகும். - ரஸ்கின் 

    உண்மையைக் கண்டுபிடிப்பதே மனிதனுடைய மகோன்னதமான லட்சியம், உண்மையைத் தேடுவதே பரமோத்தமமான தொழில்.  அது அவனுடைய கடமையும் ஆகும். - எட்வர்ட் போப்ஸ் 

    நம்பக்கம் உண்மையிருப்பது வேறு.  நாம் உண்மையின் பக்கத்தில் இருக்க விரும்புவது வேறு. - லிட்வா

    எல்லா அம்சங்களிலும் உண்மையான உபதேச மொழிகள் சிலவே. - வாவனார் கூஸ் 

    ஒன்றே உள்ளது.  பல மாறி மறையும்.  விண்ணின் வெளிச்சம் என்றும் ஒளி தரும்.  மண்ணின் நிழல்கள் பறந்தோடிவிடும். - ஷெல்லி 

உண்மை  உரைப்பதற்குச் சாத்தியமான ஒரே வழி கலைதான், அதுதான் கலையின் புகழும் நன்மையும் ஆகும். - ராபர்ட் பிரௌணிங் 

    பொருள் சேர்ப்பதில் மட்டுமன்று புகழ் தேடுவதிலுங்கூட நாம் மரிக்கும் மனிதரே.  ஆனால், உண்மையை நாடுவதில் நகம் அமரர்.  அழிவுக்கும் மாறுதலுக்கும் அஞ்ச வேண்டுவதில்லை. - தோரோ 

    பெரிய விஷயங்களைப் போலவே சிறிய விஷயங்களையும் கவனிக்கக் கூடிய மனமே உண்மையும் உரமும் பொருந்திய மனமாகும் . - டாக்டர் ஜான்ஸன் 

    ஒவ்வொன்றிலும் நன்மையைக் காணவும் போற்றவும் அறிவதே உண்மையிடம் ஆசை உண்டு என்பதற்கு அடையாளம். - கதே 

    உண்மை மனிதனுக்குச் சொந்தம்; பிழை அவனுடைய காலத்துக்குச் சொந்தம். - கதே 

    உண்மை ஒரு பெரிய தீவர்த்தி.  அருகில் செல்ல பயந்து கண்களைச் சிமிட்டிக் கொண்டே அதைக் கடந்து செல்கிறோம். - கதே 

    தரையோடு தரையாய் நசுக்கப் பட்டாலும், சத்தியம் மறுபடியும் எழுந்து நிற்கவே செய்யும்.  ஆண்டவனுடைய அந்தமில்லா ஆண்டுகள் அதற்கும் உண்டு. - பிரையண்ட் 

    ஏன் உண்மையாய் நடக்க வேண்டும்? - இந்தக் கேள்வி மூலமே இகழ் தேடிவிட்டாய் - 'மனிதனாயிருப்பதால்' என்பதே அதற்கு மறுமொழி. - ரஸ்கின் 

    சத்திய நெஞ்சுக்குள்ள ஒரே ஓர் அசௌகரியம் யாதெனில், எளிதாய் நம்பிக்கொள்ளும் தன்மையே. - ஸ்ர் பிலிப் லிட்னி

    எப்பொழுதும் சமர்க்களத்தில் அல்லது செயக் கொண்டாட்டத்தில் இருப்பவன் சத்தியத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருத்தல் துர்லாபம். - கௌலி 

    நமக்கு ஆனந்தம் அளிக்கக் காரணமாய் இருப்பது எதையும் மாயை என்று கூற நியாயமே கிடையாது. - கதே 

    உண்மையே தெய்வீகம் பொருந்தியது.  சுதந்திரம் இரண்டாவது ஸ்தானம் பெறும்.  உண்மை உணர்வதற்குச் சுதந்திரம் அவசியமானாலும் சுதந்திரத்தோடு உண்மை சேராவிடில், சுதந்திரத்தால் ஒரு பயனும் உண்டாகாது. - மார்லி 

முரணில்லாதிருக்க முயல்க.  உண்மையாயிருக்க மட்டுமே உழைத்திடுக. - ஹோம்ஸ் 

    அதிகமான ஜனங்கள் நம்புகிறார்களா? அப்படியானால் அவ்வளவுக்கவ்வளவு அதிக ஜாக்கிரதையாக அந்த விஷயத்தை ஆராய்தல் அவசியம். - டால்ஸ்டாய் 

    உயிரளிக்கும் உண்மையினின்று நம்மைப் பிறழச் செய்யும் சகப் பொய்கள் நாசமாய் ஒழிக! - டேனிலன் 

    ஏதேனும் ஓர் உண்மையைத் தள்ளி மிதித்து விட்டால், அது சமாதான மொழியாய் இருப்பதற்குப் பதிலாகச் சமர் தொடுக்கும் வாளாய் மாறிவிடும். - ஹென்றி ஜார்ஜ் 



    'சடங்கு' - அதன் அடியார் குழாங்கள் உபயோகமற்ற நிழல்களுக்காக உயில் துறக்க எப்பொழுதும் தயார் . 'உண்மை' - அழியா விஷயங்களின் அன்னை.  ஆயினும் அதற்கு ஒரு நண்பனைக் காண்பது அரிது. - கூப்பர் 

    உண்மையாக இருக்கத் துணிக. ஒன்றிற்கும் பொய் வேண்டியதில்லை.  பொய்யை விரும்பும் குற்றம் அதனாலேயே இரண்டு குற்றமாய்விடும். - ஹெர்பர்ட் 

    சுருதிக்காக அறிவை அகற்றுபவன் இரண்டின் ஒளியையும் அவிப்பவனாவான்.  அவன் செயல், கண்ணுக்கு எட்டா நட்சத்திரத்தைத் தூர திருஷ்டிபக் கண்ணாடி வழியாய்த் தெளிவாய்ப் பார்ப்பதற்கு என்று கண்களை அவித்துக் கொண்டது போலாகும். - லாக் 

    தவறு ஒன்றுதான் சர்க்கார் தயவை வேண்டும்.  உண்மைக்கு அது வேண்டியதில்லை. - தாமஸ் ஜெவ்வர்ஸன்

    எந்தப் பொய்யும் வயோதிகம் அடையும் வரை வாழ்ந்ததில்லை.- லோபோகிளீஸ் 

    மனிதனுடைய முதல் மொழி 'ஆம்' இரண்டாவது 'அன்று'; மூன்றாவதும்  இறுதியானதும் 'ஆம்'.  பலர் முதலாவதோடு நின்று விடுவர் ; வெகு சிலரே இறுதி மொழிவரை செல்வர். -பழமொழி 

    முதலில் தூசியைக் கிளப்பி விடுகிறோம்.  பின்னால் பார்க்க முடியவில்லை என்று முறையிடுகிறோம். - பிஷப் பார்க்லி 

    மெய்யும் பொய்யும் கை  கலக்கட்டும்.  பகிரங்கமாகக் கை  கலந்து போர் புரியின், என்றேனும் மெய் தோல்வியடைந்ததைக்  கண்டவர் உளரோ?- மில்டன் 

    பாவத்திற்குப் பல கருவிகள் உண்டு.  ஆனால் அவற்றிற்கெல்லாம் பொருத்தமான கைபிடி பொய். - ஹோம்ஸ் 

    பொய்யானவற்றால் கவரப்படும் மனம் நல்ல விஷயங்களில் சுவை காணாது.- ஹொரேஸ் 

    முதலில் ஒரு குற்றம் செய்தவன் அதை மறைக்கப் பொய்யுரைக்கும் பொழுது இரண்டு குற்றங்கள் செய்தவனாகிறான். - வாட்ஸ் 

    முதலில் பொய்யாய்த் தோன்றுவது எல்லாம் பொய்யாகி விடா. - கதே 

    பிழை செய்தால்  பிறர் கண்டுகொள்ள முடியும்.  ஆனால் பொய் கூறினால்   பிறர் கண்டுகொள்ள முடியாது. - கதே 

    பலவீனத்தின் அளவே பொய்மையின் அளவும்.  பலம் நேரிய வழியில் செல்லும் குழிகள் அல்லது துளைகள் உள்ள ஒவ்வொரு பீரங்கிக் குண்டும் கோணியே செல்லும், பலமற்றவர் பொய் சொல்லியே தீரவேண்டும். - ரிக்டர் 

    முழுப் பொய்யோடு முழு வல்லமையுடன் போர்புரிய முடியும்.  ஆனால் மெய் கலந்த பொய்யோடு போர்புரிதல் கஷ்டமான காரியம். - டெனிஸ்ன்

    மெய் கலந்த தவறுகளே அபாயகரமானவை.  மெய்க் கலப்பாலேயே அவைகள் எங்கும் பரவச் சாத்திய மாகின்றது.- ஸிட்னி ஸ்மித் 

    சுத்தப் பொய்யால் ஒரு நாளும் தொந்தரவு உண்டாவதில்லை. - ஸிட்னி ஸ்மித்  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...