முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அழகு

     அதன் பின் ஒரு கவிஞன் அவரைப் பார்த்து, 'ஐய ! அழகைப் பற்றிச் சிறிது சொல்லுங்கள்' என்றான்.  அவர் சொல்லத் தொடங்கினார்:

அழகு எங்கே உள்ளது என்று உங்களால் தேட முடியுமா?  அந்த அழகே உங்கள் வழியாகவும் வழித்துணையாகவும் இருந்தாலன்றி, அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?

அந்த அழகே உங்கள் வார்த்தைகளின் கோர்வையாக அமைந்தாலன்றி, அதைப்பற்றி நீங்கள் எப்படிப் பேசமுடியும்?

வருத்தப்படுவோரும் துன்பப்படுவோரும், அழகு என்னும் நங்கை, பரிவும் கனிவும் உடையவள்; தனக்கே உரிய பெருமிதத்தினால் நாணத்தோடு நடைபயிலும் கன்னித் தாயைப் போல், அந்த அழகு நம்மிடையே நடை பயில்கிறாள் என்கின்றனர்.

ஆர்வம் மிக்கவர்களோ அப்படியன்று.  அழகென்பது வன்மையும் அச்சமும் நிறைந்தது.  புயலைப் போல, அது நம் காலடியில் உள்ள பூமியையும் மேலுள்ள விண்ணையும் அசைத்து ஆட்டிவிடுகின்றது என்கின்றனர்.

களைப்புற்றவர்களும் சலிப்படைந்தவர்களும், அழகென்பது நம் காதின் அருகிலே கிசுகிசுக்கும்.  மென்மையாக ரகசியமாகப் பேசும் தன்மை வாய்ந்தது.  நம்முடைய ஆத்மாவிலேதான் அது உரையாகும் என்றும், சிறிய சுடர் இருளுக்கஞ்சி நடுங்குவதைப்போல, நம்முடைய அமைதியிலே அதனுடைய குரல் வளைந்து கொடுக்கின்றது என்றும் கூறுகின்றனர்.

ஆனால், அமைதியற்றவர்கள் அந்த அழகு மலையினிடையே உறுமுவதை நாம் கேட்டிருக்கிறோம் என்றும், அவ்வழகினது ஒளியிலிருந்தே விலங்கினத்தின் குளம் பொலியும் , பறவைச் சிறகின் படபடப்பும், சிங்கத்தின் முழக்கமும் உண்டாகின்றன என்றும் உணர்கின்றனர்.

    நகரத்தை இரவிலே காவல் காக்கும் காவலன், அழகு என்பது கீழ்த்திசையிலே வைகறையோடு தான் தோன்றுகிறது என்கின்றான்.

உச்சி வேளையிலே உழவர்களும் வழிப்போக்கர்களும், நாங்கள், அவ்வழக்கு மாலை நேரத்தின் பலகணியிலே சாய்ந்து, நிலத்தை நோக்குவதைக் கண்டிருக்கிறோம் என்கின்றனர்.

வீதியில் உறைந்து பனிக்கட்டியைக் கூட்டித் தள்ளும் பணியாளனோ அழகென்பது மலை முகட்டின் மீதிருந்து தாவிக் குதித்து வசந்தத்தோடு தான் வரும் என்கிறான்.

கோடையிலே அறுவடை செய்யும் உழவர்கள் அழகென்னும் நங்கை, சரத் காலத்திலே ,தன் கூந்தலில் பனித்துளிகள் சொட்டச் சொட்ட இலைகளூடே நடனமாடுவதை நாங்கள் கண்டிருக்கிறோம் என்கின்றனர்.

அழகைப் பற்றி நீங்கள் இப்படி எல்லாம் பேசி இருக்கிறீர்கள்.

ஆனால், உண்மையிலே நீங்கள் அழகைப் பற்றிப் பேசவே இல்லை. உங்களுடைய நிறைவேற்றப்படாத தேவைகளைப் பற்றியே தான் நீங்கள் பேசியுள்ளீர்கள்.

அழகென்பது ஒரு தேவையன்று; மகிழ்ச்சியின் உச்சம்.

அஃது ஒரு நீர்வேட்கை கொண்ட வறண்ட நாவோ, இரப்பதற்கென நீட்டும் வெறுங்கையோ அன்று.  உண்மையிலேயே அது ஒரு கொழுந்து விட்டெரியும் இதயமும், மந்திரத்தால் கட்டுண்ட உயிராற்றலுமாம்.  அது நீங்கள் பார்க்கின்ற உருவமுமன்று; கேட்கின்ற இன்னிசையுமன்று.

ஆனால், அழகென்பது நீங்கள் உங்கள் கண்களை மூடிக் கொண்டிருப்பினும் காணும் உருவமாகவும், உங்கள் காதுகளை அடைத்துக் கொண்டிருப்பினும் கேட்கின்ற இன்னிசையாகவும் விளக்குவதாகும்.



அது பிழியப்பட்ட மரப்பட்டையின் சாற்றிலே வடித்தெடுக்கும் பானமன்று ; அதல்லாமல் கூர் அலகோடு இணைக்கப்பட்டுள்ள சிறகுகளுமன்று.

உண்மையிலேயே அஃது எக்காலமும் மலர்ந்துள்ள பூங்காவும் எக்காலமும் பறந்து திரிகின்ற தேவ தூதர்களின் கூட்டமும் ஆகும்.

ஆர்பலீஸ் நகர மக்களே, வாழ்க்கை தனது புனிதமான முகத்திரையை விலக்கும் போது , வாழ்க்கையே அழகு வாய்ந்தது.

ஆனால் நீங்களே வாழ்க்கை, நீங்களே அதன் முகத்திரை.

அழகோ தோற்றமும் முடிவுமற்றது.  அது தன்னைத் தானே ஒரு கண்ணாடியில் காண வல்லது.

ஆனால், நீங்களே தோற்றமும் இறுதியும் அற்றவர்களாயும்   நீங்களே கண்ணாடியாகவும் இருக்கின்றீர்கள். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...