முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மகிழ்ச்சி

     ஆண்டுக்கு ஒருமுறை அந்நகரத்திற்கு வருகின்ற ஒரு துறவி, அவர் முன் வந்து. 'எமக்கு மகிழ்ச்சியைப் பற்றிக் கூறுங்கள்' என, அவர் கூறுவார்:

    மகிழ்ச்சி என்பது விடுதலை கீதம்.  ஆனால், அது விடுதலையன்று.  அது உங்கள் ஆசையின் மலர்ச்சி.  ஆனால், அது உங்கள் ஆசையின் பலன் அன்று.  அது உயர்ச்சி என்று கூறப்படும் பெரும்பள்ளம்.  ஆனால், அது பள்ளமுமன்று உயர்ச்சியும் அன்று.  அது சிறைப்படுத்தப் பட்ட சிறகுடைய ஒரு பறவை.  ஆனால், அது அப் பறவையைச் சூழ்ந்துள்ள வெளியன்று .  ஆம்! உண்மையில் மகிழ்ச்சி ஒரு விடுதலை கீதமே!

    நீங்கள் உங்கள் இதயத்தின் முழுமையோடு மகிழ்ச்சி எனும் அந்த இசையைப் பாட நான் மகிழ்வேன்.  ஆனால், நீங்கள் அவ்வின்னிசையிலே உங்கள் இதயத்தை எல்லாம் இழந்து விட ஒப்புக் கொள்ள மாட்டேன்.

    உங்களிலே சில இளைஞர்கள், யாவும் மகிழ்ச்சியிலே தான் உள்ளதென்னும் நோக்கத்தோடு அதனையே அடைய முயல்கின்றனர்.

    நீங்கள் அவர்களைச் சீர்தூக்கி நியாயம் கூறிக் கண்டிக்கின்றீர்கள்.

    நான் அவர்களைப் பற்றித் தீர்ப்பளிக்க மாட்டேன்; கண்டிக்கவும் மாட்டேன்; மாறாக, அவர்கள் மகிழ்ச்சியைத் தேட அனுமதிப்பேன்.

    அவர்களும் மகிழ்ச்சியைத் தேடிக் காணுவார்கள்.  ஆனால், அதை மட்டும் தனித்தன்று.

    மகிழ்ச்சியின் உடன் பிறந்த சகோதிரிகள் எழுவர் ஆவர்.  அவர்களுக்குள்ளே கடைக்குட்டித் தங்கை கூட மகிழ்ச்சியைக் காட்டிலும் அழகு மிகுந்தவள் .

    கிழங்கைத் தோண்டி எடுக்க முயலும் மனிதனுக்குப் புதையல் கிடைத்திருக்கிற செய்தி நீங்கள் கேள்விப்படாததா?

    உங்களிலே சில முதியவர்கள், ஏதோ குடி போதையில் தாங்கள் செய்த  தவற்றுக்காக வருத்தப் படுவதைப் போலத் தமது மகிழ்ச்சியை நினைவு கூர்கின்றனர்.

    வருந்துதலோ, உள்ளத்தினை மூடியுள்ள மேக மூட்டத்தினை ஒத்ததே அல்லாமல் அதனுடைய தூய தன்மையன்று.

    அவர்கள் தாங்கள் அடைந்த மகிழ்ச்சியை நன்றியுணர்வோடு வேனிற் காலத்திலே செய்த அறுவடையை நினைப்பதைப் போல நினைக்க வேண்டும்.

    ஆயினும் அவர்கள் தாமடைந்த மகிழ்ச்சிக்காக இரங்குவதால் , உளத்துக்கு ஆறுதல் கிடைக்குமானால் அங்ஙனமே ஆறுதல் அடையட்டும்.

    உங்களிலே சிலர் மகிழ்ச்சியைத் தேடுவதற்குரிய இளமையையும், நினைவு கூர்தற்குரிய முதுமையையும் வாய்த்தவர்கள் அல்லர்.

    தேடுதலும் நினைவு கூர்தலும் ஆகிய தம் அச்சத்தினாலேயே, அவர்கள் எல்லா மகிழ்ச்சிகளையும் வெறுத்து ஒதுக்கி விடுகின்றனர்.  இல்லையேல் அவர்கள் தங்களது உயிராற்றலை (ஆத்மசக்தி) அலட்சியப் படுத்தியோ, அதற்கு ஊறு செய்தோ - விடுவார்கள்.

    ஆனால், அவர்களின் அப்படிப்பட்ட ஒதுக்கிவிடும் தன்மையும் அவர்களது மகிழ்வேயாம்.

    இதைப் போலவே தங்கள் நடுங்குங் கைகளால் கிழங்கைத் தோண்டி எடுக்க முயலும் நேரத்திலும், அவர்கள் புதையலைக் கண்டெடுக்கின்றனர்.

    உயிராற்றலை ஊறு செய்ய யாரால் முடியும்?  இரவிலே இன்னிசை பாடும் பறவையால் இரவின் அமைதியைக் கெடுக்கவோ, மின்மினியால் விண்மீன்களை ஊறு செய்யவே முடியுமா?

    உங்கள் தீச்சட்டியின் புகையும் தீயும் காற்றைக் கனமாக்கி விட முடியுமா?

    உங்களது கைத்தடியால் கலக்கி விடத்தக்க, அமைதியான சிறிய குளம் போன்றது தான் உயிராற்றல் என நீங்கள் நினைக்கின்றீர்களா ?

    நீங்கள் உங்கள் மகிழ்ச்சியைப் பல நேரங்களில் தியாகம் செய்வதன் மூலமாக, அந்த மகிழ்வுக்கான விருப்பத்தை உங்கள் ஓய்வு நேரத்துக்கெனச் சேமித்து வைக்கின்கிறீர்கள்.



    இன்றைக்கு விலக்கிய அல்லது விலகிய ஒன்று நாளைக்கு நமக்காகக் காத்திருக்கின்றது என்பதை அறியாதவர் யார்?

    தன்னுடைய வாரிசையும் தனக்குரிய தேவையையும் உங்களுடைய உடல் உணர்ந்தே உள்ளது.  அஃது ஏமாற்ற முடியாத ஒன்றாகும்.

    உங்கள் உடலே உங்கள் ஆத்மாவின் வீணை.

    அந்த வீணையிலிருந்து இனிய இசையையோ அபஸ்வரங்களையோ மீட்டுவது உங்களிடத்திலே தான் உள்ளது.

    இப்போது உங்கள் இதயத்தை நீங்கள் பார்த்து, நாம் எப்படித் தான் மகிழ்விலே நன்மையையும் தீமையையும் வேறுபடுத்திக் காண முடியும் எனக் கேட்கின்றீர்கள்.

    வயற் புறத்திற்கும் பூங்காவுக்கும் செல்லுங்கள். அங்கே மலர்ந்துள்ள மலர்களிலிருந்து தேனைச் சேகரிப்பதால் தேனீ மகிழ்ச்சி அடைகின்றது என்பதை அறிவீர்கள்.  ஆனால், அந்தத் தேனீக்குத் தன் தேனைத் தருவது கூட, மலருக்கு மகிழ்ச்சியே ஆகும்.

    ஏனெனில், தேனீக்கு மலர் என்பது வாழ்க்கையின் ஊற்று.  மலருக்கோ தேனீ ஒரு காதல் தூதுவன்.

    மலர், தேனீ இரண்டுக்குமே, கொடுப்பதும் பெறுவதும் இன்றியமையாத தேவையும் இன்பத்தின் உச்ச நிலையும் ஆகும்.

ஆர்பலீஸ் நாட்டு மக்களே, உங்கள் இன்ப நிலையிலே - மகிழ்ச்சியிலே , மலரைப் போலவும் தேனீயைப் போலவும் திகழ்ந்து வாழுங்கள்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...