பாரதிதாசன் ஒரு பார்வை
நீஎதைப்பற்றிதான்?
எழுதவில்லை?
பூமியின் தோள்களில்
வெய்யில் தூரிகையால்
தொய்யில் எழுதுமே
விடிகாலை....
அதைப்பற்றி
வெப்பப் பகலை வீழ்த்திய
ஒரு
புரட்சிக்குப் பிறகு....
உறைந்த ரத்தக்களமாய் குளிர்ந்து கிடக்குமே
அந்தி
அதைப்பற்றி
காற்று வாங்க வருவோர்க்கு
அலைச்சா மரங்கள் வீசுமே
கடல்....
அதைப்பற்றி
ஓ!
எதைப்பற்றித்தான்
நீ எழுதவில்லை
இலையுதிர் காலம்
ஆண்டுக்கொரு முறை....
வெளிநாடு போனவள்
வீட்டுக்கு வருவாள்!
வந்ததும் வராததுமாய்
மரக் காலண்டரின்
அத்தனை தாள்களையும்
மொத்தமாய்க் கிழிப்பாள்!
நட்சத்திரங்கள்
விடியல் -
தன்
ஒவ்வொரு
பிறந்த நாளிலும்
ஒரேமூச்சில் ஊதி
அத்தனை
மெழுகுவத்திகளையும்
அணைத்து விடுகிறதோ?
மெழுகுவர்த்தி
மரணத்தை
வரங்கேட்டா
அந்த
உச்சித்தவம் நடக்கிறது?
எந்தத் துயரத்தை
எழுதியெழுதி
இப்படி மசிகசிகிறது இந்தப்பேனா?
கண்டு சொல்லுங்கள்!
கண்ணெதிரே நடப்பதென்ன
கொலையா? தற்கொலையா?
எப்பொழுதுமே இதற்குத்
தேய்பிறையென்றால்
இது என்ன
சபிக்கப்பட்ட நிலவா?
கண்ணீர் மருந்தாமோ?
அழுவதை நிறுத்து
அன்பே!
காதலின் கடலோரம்
எப்போதும்
புன்னகை என்னும்
முத்துக்குளித்தே பழக்கப்பட்ட நீ
இன்று ஏன்
கண்ணீர் உப்புக் காய்ச்சுகிறாய்?
அழுவதை நிறுத்து
அன்பே!
ஏனழுகிறாய்?
நீ
தூதுவிட்ட மேகங்கள்
பாதிவழியிலே
மழையாய்க் கரைந்ததற்கோ?
கிட்டக்கிட்ட இருந்தும்
தொட்டுக்கொள்ள முடியாத
தண்டவாளங்களாய்
நாம்
தனியானதற்கா?
எதார்த்தம்
பீதி கொண்டு
உன்
பெயரெழுதப் போகிறேன்!
பேனாமுள் பட்டு
உன் பெயர்
காயப்பட்டு விடுமோ என்ற
கலக்கம் எனக்கு....
பேசு!
எனக்கிருப்பதோ
உன்
இசையால் மட்டுமே
தணிகிற தாகம்!
உன்
இதழ்க் கிண்ணங்களில்
நீ நிரப்பிவைத்திருப்பதோ
வெறும் மௌனம்.
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
எம்
புதுக்கவிதைகளெல்லாம்
பேனாக்கள் என்னும்
சோதனைக் குழாய்க்குள்
சூல்கொண்ட சிசுக்கள்!
முள்ளை முள்ளால் எடுப்பது
முன்னோர் வழிதான்!
ஆனால்
கண்ணுக்குள் விழுந்த முள்ளுக்கு
அந்தப்
பழைய தத்துவம் பயன்படுமா?
நிகழ்காலத் தீயில்
தேசம் கருகும்போது
நிச்சயமாக நாங்கள்
நீரோக்கள் அல்ல...
பேனாக்கள் எமக்குப்
பிடில்களும் அல்ல.
வாழையடி வாழையாய்
இலக்கியத்தில் படிந்த
வாழைக் கறையழிக்க
எம் பேனாவிலிருந்து
மைத்துளிகள்
எலுமிச்சம் பழச்சாறாய்
இறங்குகின்றன!
ஆகாயத்தில்-
வானவில்லுக்கு அடித்த
வர்ணம்
காய்ந்து விட்டதா என்று
தொட்டுப் பார்க்க
எம் விரல் நீள்வதில்லை
ஏழையின்
கண்ணீரைத் துடைத்துக்
காயவைக்கத்தான்
பத்து விரல்களும்
படபடக்கின்றன.
வித்தியாச அன்னங்கள்
பெண்ணின் மேல்
காலகாலமாய்ப் படிந்த
அடிமைப் புழுதியை
அவ்வப்போது பெய்யும்
சில
சலுகைத் தூறல்களில்
சலவை செய்ய முடியாது.
ஒரு
கனலில் குறித்துக்
கரையேறினால் தான்
அழுக்கின் அணுக்கள்
அதில் கரையும்.
கல்லெல்லாம்
சிற்பமான பூமியில்தான்
சிற்பம் போன்ற செல்வியரெல்லாம்
கல்லாகி ஆகியே காலங்கழித்தார்கள்.
எண்ணுங்கள்!
அதுபோல்
இன்னும் நம்மிடை எத்தனை அகலிகை?
விளம்பரங்களின்
போலிச் சிம்மாசனங்களில்
எப்போதும் பெண்ணையே
இருத்தி வைப்பதெல்லாம்
அவளோர்
போகப்பொருள் என்று
நிரந்தரமாக நியாயப்படுத்தத் தானே?
அந்தி
யாரங்கே?
ராத்திரி வரப்போகும்
ராச குமாரிக்கு
மேற்கு அம்மியிலே
மஞ்சள் அரைப்பது யார்?
அங்கே-
வழிந்தோடுவ தெல்லாம்
வானத்துக்கு
ஒரு
பகலைப் பலிகொடுத்த
ஏத்தமா?
இத்தனை
வர்ணப் புடவைகளைக்
கலைத்துப் போட்டும்...
கடைசியில்
இரவு
கறுப்பைத்தானே
கட்டிக் கொள்கிறது?
நீலத் திரையில்
யாரோ
வரையக் கொண்டுவந்த
வர்ணக் கிண்ணம்-
சூரியனில் தடுக்கிச்
சிந்தி விட்டது!
ஆனால்
சிந்தியதெல்லாம்
சித்திரமானது!
வெயில் மறைவுப் பிரதேசங்கள்
சுதந்திர
வெளிச்சம்
சேரியில்
விழாமல்
மாளிகை
நிழல்களே
மறைத்து
உறக்கம் கலைவதெப்போ?விட்டன!
மயக்கம் தெளிவதெப்போ?
பாரத தேவீ!
நீ
கிடப்பதென்ன
உறக்கத்திலா?
மயக்கத்திலா?
உறக்கந்தான் என்றவர்கள்
உன்னைத்
துயிலெழுப்புவதாய்...
தாலாட்டுப் பாடினர்;
தாமும் உறங்கினர்!
மயக்கந்தான் என்றவர்கள்
உன்
மயக்கந் தெளிவிப்பதாய்....
உன்முகத்தில்
சாராயந் தெளித்தனர்;
தாமும் மயங்கினர்!
எனக்குத் தெரியும்!
உன் முகத்தில்
இரத்தத் துளிகள் தெறிக்கும் வரைக்கும்
உன்
உறக்கம் கலைவதாவது...
மயக்கம் தெளிவதாவது...
அது வரைக்கும்
பசி மயக்கத்தில்
படுத்துக் கிடக்கும் பாரதத்தோழனை
உன்
தேசிய கீதத்திற்கு
நிற்க வேண்டும் என்று
நிர்பந்திக்காதே!
உரைப்பதற்கு ஒன்றுண்டு
அடியே காதலி!
என் சம்யுக்தா!
நம்மைக்
கல்யாண தேசத்திற்குச்
சுமந்து செல்ல
சமூக லாயத்தின் எந்தக் குதிரையும்
சம்மதிக்காத போது...
உன்
அரண்மனையிலிருந்து
நடந்தே வந்தோம்
நாமிருவரும்.
விலக்கி வைக்கப்பட்டவர்கள்
பாஞ்சாலியா?...
வா மகளே! வா!
துச்சாதனன் உன்னைத்
தொட்டிழுக்க வரும்போது-
மாதவிலக்கானதனால்.....
ஓராடை கட்டி நீ
உள்ளே இருந்தாயாம்?
இங்கே-
நான் வாழும் தேசத்தின்
நடைபாதை ஓரத்தில்
உடுத்தத் துணியில்லா
ஒருகோடிச் சோதரியர்...
ஓராடை மட்டுந்தான்
உடுத்திருக்கின்றாரே!
மாதமெலாம் அவர்களுக்கு
மாதவிலக்கா மகளே?
சகோதரிகாள்!
நீங்கள்
ஜவுளிக்கடைப் பொம்மைகளாய்
ஜனித்திருக்கக் கூடாதா?
வடுகபட்டி முதல் பெரியகுளம் வரை
எங்கள் வராக நதியில்
தண்ணீர்
வரவேண்டும் என்னும்
வரம் வேண்டி
கரையோரம்
ஒற்றைக்கால் தவமிருக்கும்
ஒரு நூறு தென்னைமரம்!
அதோ! ஆலடி வட்டம்!
அங்கே
தம்மை வளர்த்துவிட்ட
மண்ணின் சுகத்தை
விழுதுகளை அனுப்பி விசாரிக்கும்
சில ஆலமரங்கள்!
தூரத்து வயல்களில்...
தொலைந்து போன தங்கள் வாழ்வை
நிலங்களில் குனிந்து
நிமிராமல் தேடும்
நிரந்தரக் கூலிகள்!
தன்மானம்
உங்களைப் போலல்ல
பெண்களே
இலைக் கூந்தலில்
அந்த
மரஞ்செடி கொடிகள்
தங்கள்
சொந்தப் பூக்களையே
சூடிக் கொள்கின்றன.

கருத்துகள்
கருத்துரையிடுக