தன் மார்பிலே ஒரு குழந்தையை அணைத்த வண்ணம் அங்கு நின்றிருந்த ஒரு தாய் அவரை நோக்கி, 'ஐயா, எங்களுக்குக்
குழந்தைகளைப் பற்றிச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லலுற்றார் :
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்.
அவர்கள் அனைவரும் தங்களுக்காகவே ஏக்கமுற்றிருக்கும் வாழ்க்கையின் புதல்வரும் புதல்வியருமே ஆவர். அவர்கள் உங்கள்
மூலமாக வந்தார்களே அல்லாமல் உங்களிலிருந்து வந்தவர்கள் அல்லர்.
அவர்கள் உங்களுடனே இருந்த போதிலும் உங்களுடைய உடைமைகள் அல்லர்.
நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பை மட்டுமே கொடுக்கலாம். உங்கள் எண்ணங்களை அல்ல. ஏனெனில், அவர்களுக்கென வேறு
எண்ணங்கள் உள்ளன.
அவர்கள் உயிர்களுக்கல்ல. உடல்களுக்கு மட்டுமே, நீங்கள் இருப்பிடம் தரலாம். ஏனெனில், அவர்களின் உயிர் (ஆத்மா) நாளை என்னும் வீட்டிலே தான் உள்ளது. நீங்களோ உங்கள் கனவிலுங் கூட அங்குச் செல்லுதற்கு இயலாது.
நீங்கள் அவர்களைப் போல் இருக்கப் போராடலாம். ஆனால், உங்களைப்போல் அவர்களை ஆக்க முயலாதீர்கள்.
ஏனெனில், வாழ்க்கை பின்னோக்கிப் போவதுமில்லை;நேற்றோடு தங்கிவிடத் தாமதிப்பதும் இல்லை.
உங்கள் குழந்தைகளாகிய அம்புகளை எய்யும் வில்லாகவே நீங்கள் இருக்கின்றீர்கள். வேடனோ முடிவற்ற நெறியிலுள்ள குறியை இலக்கு வைத்துத் தன் அம்பு வேகமாகவும் தூரமாகவும் செல்லத் தக்கவாறு உங்களைத் (வில்லை) தன் பலங்கொண்ட மட்டும் வளைத்து
அம்பெய்கிறான்.
வேடன் கையிலுள்ள வில்லாகிய உங்களது வளைவு கூட மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கட்டும்.
அவ்வேடன் பறந்து தூரத்திலே செல்லும் அம்பை எப்படி நேசிக்கிறானோ அப்படியே தன் கையிலுள்ள வில்லையும் அன்றோ நேசிக்கிறான்?

0 கருத்துகள்