"பாரதிதாசன் மேல்நாட்டுக் கவிகளைப் போல் கலையைக் கண்ணாடியாக்குகிறார். காலத்தையே சிருஷ்டிக்கிறார் என்பது மாத்திரமல்ல; காலத்தையே மாற்றுகிறார். காலத்தையே மாற்றுகிறார் என்பது மாத்திரமல்ல; மாறிய காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார் என்பது மாத்திரமல்ல; சமயம் கிடைத்தால் முன்னேயும் பிடித்துத் தள்ளுகிறார்" - பேரறிஞர் அண்ணா
கருத்தை விதையாகக் கொண்டது கவிதை; கற்பனையைக் களமாகக் கொண்டது கவிதை; கவிஞனின் உணர்வில் விளைவது கவிதை; வாழ்வில் முகிழ்ப்பது கவிதை.
' சொற்கள் சிறப்பாகக் கோர்க்கப்படுவது உரைநடை, சிறந்த சொற்கள் சிறப்பாகக் கோர்க்கப்படுவது கவிதை' - அறிஞர் ஸேம்யல் காலெரிட்ஜ்
"வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்கோர்
செயங்கொண்டான்; விருத்தமென்னும்
ஒன்பாவிற் குயர் கம்பன்; கோவையுலா
அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்
கண்பாய களம்பகத்திற் கிரட்டையர்கள்
வசைபாடக் காளமேகம்
பண்பாக உயர்சந்தம் படிக்காசு
அலாதொருவர் பகரொணாதே "
"கவிதைக்கு மிகவும் நெருக்கமானவை ஒரு துண்டு ரொட்டியும் ஒரு கலயம் கஞ்சிச் சோறும்" - பாப்லோ நெருடா
'கலை கலைக்காகவே' - பிரெஞ்சுக் கவிஞன் போதெலர் .
"உழவனின் மகன் கேட்டான்
அப்பா, கவிதை என்றால் என்ன?
விதைத்து அறுப்பது
என்றான் உழவன்
தையால்காரனின் மகன் கேட்டான்
அப்பா, கவிதை என்றால் என்ன?
கிழியாத வெதுவெதுப்பான ஆடைகளை தயாரிப்பது
என்றான் தையால்காரன்
தளபதியின் மகன் கேட்டான்
அப்பா, கவிதை என்றால் என்ன?
கொரில்லாவுக்கு எதிராக பூர்ஷ்யா வர்க்கத்தின்
இராணுவத்தை வழி நடத்தி செல்வது என்றான் தளபதி
கவிஞனின் மகன் கேட்டான்
அப்பா, கவிதை என்றால் என்ன?
எனக்குத் தெரியாது என்றான் கவிஞன்
ஆனால் கவிதைகளை எழுதுவது
கவிதை ஆகாது மகனே!" - கிரேக்கத்தைச் சேர்ந்த 'கோஸ்டிஸ் பாப்ப கோங்லோஸ்'
"கவிதை என்பது ஒரு படைப்பு அது ஒரு பூவைப் போல் இயற்கையாக மலர வேண்டும். கண்ணீர்த் துளியைப்போல் உணர்ச்சிகளில், தானே சுரக்க வேண்டும். கவிதை மனித வாழ்க்கையைத் தருவதாக இருக்க வேண்டும். கவித்துவத் தருணங்களில் மின்னலாய் உதிக்கும் வரிகளே இயற்கையான கவிதைகள். அவற்றை வடிவத்திற்காகச் சிதைக்காமல் அப்படியே தர வேண்டும் என்று முடிவு செய்தேன். மரபு யாப்பையும் மறுவுயிர்ப்புத் தந்து எழுப்ப வேண்டும் என்பது என் எண்ணம்" - கவிஞர் அப்துல் ரகுமான்.
"கவிதை என்பது உள்ளுக்குள் ஊற்றெடுத்துப் பொங்கிக் கிளம்புகிற கங்கையின் புறப்பாடு.
எண்ணங்களாகிய சலவைக் கற்களில் எழுந்த தாஜ்மகாலை எழுத்துக் களத்துக்கு இழுத்து வருகிற வலை.
பேனா என்கிற தூண்டில் பிடிபடும் மீன்;
ஆர்ப்பரித்துக் குமுறியெழும் சமுதாயத்தின் ஆயுதம்;
என் கவிதைகள் இந்தச் சமூகத்தைப் பார்க்க
உங்களுக்கு உதவும் ஜன்னல்கள்,
அந்த ஜன்னல்களின் மூலம்தான் பூமியும் என்னைப் புகைப்படமெடுத்துக் கொள்கிறது.
என கவிதைகள் என்னையே நான் கண்டுகொள்ள உதவும் கண்ணாடிகள். சில சமயம் அலை நீரில் நிழலாய் ... சில சமயம் என் சிலை வார்ப்பாய்" -மு. மேத்தா
வெயில்
சுரண்டிக் கொழுப்பவர்கள் - உன்
சூட்டில் பொசுங்கவில்லை
சுரண்டப்படுபவர்தாம் - உன்
சூட்டில் பொசுங்குகிறார்
ஆகையினால் வெயிலே - ஏழை
ஆவிபிரிந்த உடல்
வேகையில் மட்டும் சுடு - அவரை
வீணில் பொசுக்காதே! - இன்குலாப்
1981- சனவரியில் மதுரைக்கு அருகில் 'கோவலன் பொட்டல்' என்ற இடத்தில் அகழ்வாய்வுத் துறையினர் தோண்டிப் பார்த்தார்கள். அங்கு ஓர் எலும்புக்கூடு கிடைத்தது.
கையிலும் கழுத்திலும் காயத்தோடு கூடியது. இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்டதாம், இதைக் கோவலனுடைய எலும்புக் கூடுதான் என்று அமைச்சர்கள் உட்படப் பலர் மெய்சிலிர்த்துப் போற்றினார்கள். ஆராய்ச்சி உலகின் திறமையைப் போற்றி நானும் ஒரு கவிதையைச் சமர்ப்பணம் செய்தேன். அது...
தோண்டிகளுக்கு ஒரு வேண்டுகோள்
"சும்மா குறை சொல்லித் திரியக்கூடாது
தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சியைப் பற்றிச்
சும்மா குறைசொல்லித் திரியக் கூடாது
உலகத் தமிழர்களை ஒன்றுகூட்டி
மதுரையில்
தமிழுக்குப்
பல்லக்குத் தூக்கிய பவனிநாட்களில்
கோவலன் பொட்டலைத் தோண்டிப் பார்த்தோம்
என்ன வியப்பு!
பொட்டலைத் தோண்டினால்
எலும்புக்கூடு!
கையில் வெட்டுக் காயத்தோடு
இரண்டாயிரம் ஆண்டுக்கு
முந்தியது
கோவலன் பொட்டலில் கிடைத்ததாலே
கோவலன் எலும்புக் கூடாகத்தான்
இருக்க வேண்டும்
மதுரையில் உலகத் தமிழ்விழாவுக்கு
எலும்புக் கூட்டை எடுத்துக் காட்டித்
திருவருள் தமிழ்த் தாயை ஆசிர்வதிக்கிறது"
"நல்லது
பொட்டலைத் தோண்டினால்
எலும்புக்கூடு.....
தமிழ்ப்பால் பருகிய எலும்புக்கூடுகள்
எந்தக் காலத்திலும் மக்கிப் போகாது
ஏராளமான பெயரும் முகவரியும்
எம்மிடம் உண்டு
இரண்டாயிரம் ஆண்டுகளாய்
எலும்புக் கூடுகள் தாம்
தொலைந்து போய்விட்டன.
பொட்டல் தோண்டிகளே !
முயற்சி திருவினையாக்கும்
இன்னும் தோண்டிப் பாருங்கள்!
வல்வினை வந்து வளைத்த செங்கோலுடன்
பாண்டியன் நெடுஞ்செழியன் படுத்துக்கிடக்கலாம்
பாண்டியனுக்குப் பக்கத்திலேயே
பாண்டி மாதேவியின்
எலும்புக் கூடும்.....
இன்னும் தோண்டினால்
அன்னை கண்ணகியின்
எலும்புக் கூடும்...
இருக்கக் கூடும்
தோண்டிப் பாருங்கள்....."
"நிறுத்து.......
அன்னை கண்ணகியோ
வலவன் ஏவா வானவூர்தியில்
கோவலனோடு தேவருலகம் ஏகினாள் ..."
"நல்லது .....எனக்குத் தெளிவு பிறக்கிறது
இருந்தாலும் ஒரு எளிய சந்தேகம்
அன்னை
வலவன் ஏவா வானவூர்தியில்
கோவலனையும் தானே
கூட்டிக் கொண்டு போனாள்?"
"இது கூடத் தெரியாமல்
என்ன உளறுகிறாய்?
அன்னை கோவலனை அழைத்துப் போகையில்
உடலைப் போட்டு விட்டுயிரோ டேகினாள்"
"அடடா விஷயம் அப்படி என்றால்
பொட்டல் தோண்டிகளே
வேகமாய்த் தோண்டுங்கள்
ஒரு முலை இழந்த திருமா பத்தினியின்
எலும்புக்கூடு கிடைக் காவிட்டாலும்
எறிந்த ஒருமுலை பத்தினி தெய்வத்தின்
திருமுலை ஆதலால்
கற்புச் சூடு தணியாமல்
ஒரு நெருப்புப் பந்தாய்
பூமிக் கடியில் புகைந்து கொண்டிருக்கலாம்.
தொண்டால் தமிழ் வளர்க்கும்
தோண்டிப் பெருமக்களே!
கற்பின் அற்புதமும்
தமிழின் கன்னித்தன்மை போல்
காலம் கடந்தது என்பதை
'ஆராய்ச்சி' யால் நிறுவ
தோண்டிப் பெரு மக்களே!
தோண்டிப் கொண்டே இருங்கள்" - இன்குலாப்
முப்ப தாண்டுகட்கு முன்னர் ஓர்நாள்
பாவேந்தர் புதுவை பாரதி தாசனை
நேரில் சென்று சந்திக்க நினைத்தேன்
பயணச் செலவுக்குப் பணமில்லை என்னிடம்
ஆதலால் பணத்திற் கலைந்தேன். ஒரு சிலர்
கையையும், ஒரு சிலர் பொய்யையும் விரித்தனர்.
புறப்பட்டுப் புதுவைக்குப் போக வேண்டுமே
என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
கீர்த்தியோடு விளங்கும் கீவளூர் கோயிலில்
வெள்ளை அடிக்கும் வேலை கிடைத்தது.
மலைப் பிளவு வழியாய் வந்த அந்நியர்
கொள்ளை அடித்தனர் கோயிலில் நானோ!
வெள்ளை அடித்தேன் வெண்சுண் ணாம்புநீர்
என்றன் உடம்பில் எங்கும் வழிந்தது!
அப்பளம் தனில்வரும் கொப்பளம் போல
வலக்கரம் தன்னில் மலர்ந்தது கொப்புளம்!
ஆறு நாள் சுண்ணாம் படித்தேன், அதற்கோ
ஒன்றரை ரூபாய் உடனே கிடைத்தது
புதுவையை நோக்கிப் புறப்பட்ட ரயிலில்
அன்றே ஏறினேன்! அடுத்த நாள் காலையில்
சுவைதரும் செந்தமிழ்ச் சிங்கமாம் அந்தக்
கவிதா மண்டலக் கவியைக் கண்டேனே!"
நெசவாளி
"காலத்தால் முந்தியவன் கவிஞன் அந்தக்
கவிஞனையும் முந்திய வன் ஆடைநெய்வோன்
ஓலைதனில் எழுதாமல் அன்னோன் நெய்யும்
உடையதனில் வண்ணப்பாட் டெழுதும் சிங்கம்"
இளவேனில்
"செந்தீ போன்ற சிறந்த மாத்திரை
குயிலின் கூட்டம் கோதிக் கோதி
குறடுவாய் திறந்தே கூவிக்கூவி
இசையமு தளிக்கும் இளவேனிற் காலம்?"
விளக்கு
"ஏரிதான் வயலின் தாய்ப்பால்
எரிகின்ற விளக்கே! எண்ணெய்ச்
சூரியன் நீதான்! தீயின்
தொடர்கதைகள் சுருக்கம் நீதான்!"
பாவேந்தர்
"கூத்தாடிக் கொண்டிருக்கும் புராண நூலின்
கொட்டத்தை அடக்கிவரும் கவிஞன் நல்ல
நாத்திகன்! நற்றமிழன்! இந்நூற்றாண்டு
நம் நாட்டுக் களித்துள்ள எழுத்துச் செல்வம்
ஆத்திகர்க்கு வேப்பங்காய், நமக்கு மாங்காய்
அகத்தியர் போல் உடல் மரணம் மட்டும் உள்ளோன்
சூத்திரனே என்பவனை வதைக்கச் செல்லும்
சுப்புரத்தினக் கவிஞன்! எதிர்ப்பில் வாழ்வோன்"
"பாரதி இறந்த ஆண்டிலே பிறந்த நான்
பாரதிதாசனின் பாடலைப் பயின்றதால்
ஒருவா றென்னை உயர்த்திக் கொண்டேன்.
செய்யுள் இலக்கணம் தெரிந்து கொண்டபின்
தடுமாற்றம் இல்லாத் தகுதி பெறலானேன்
தகுதி இருப்பின் தனித்தி யங்கலாம்
அத்தகுதி என்னிடம் அதிக மிருப்பதால்
தமிழ்க் கவிதை உலகில் தனித்தியங்குகின்றேன்
பெரும்பாலும் கவிஞர்கள் பிறரைப் பின்பற்றி
எழுதும் வழக்கம் இங்குண்டே! அந்த
நிழல்வழி வாசலை விட்டு நீங்கி
எழுதும் கவிஞன்நான் இவரையோ அவரையோ
பின்பற்றி எழுதப் பிரியப்படாதவன்
கணக்கைப் போன்றதே கவிதை என்பதால்
கவிதை புனைந்திடக் கற்பனை வேண்டும்
என்னும் கருத்தை நான் ஏற்பதே இல்லை
மடையனாய் இருப்பதில் உள்ள மகிழ்ச்சி
அறிஞனாய் இருப்பதில் இல்லை ஆதலால்
முட்டாளாய் இருக்கவே முயன்று வருகிறேன்
நானொரு கவிஞன்! அதைவிட
நானொரு நல்லவன் இந்த நாட்டிலே!"
- சுரதா (சுப்புரத்தினதாசன்)
சம்பள வர்க்கம்
"முதல் தேதிச்
சக்கர வர்த்திகள்
மாத நடுவில்
மன நோயாளிகள்
கடைசி வாரத்
தத்துவ ஞானிகள்"
"தண்ணீர் போல்
எளிய என் கவிதைக்கு
அலைகளைச் சிருஷ்டிக்கிற ஆற்றலும்
நுரைகளைப் பிரசவிக்கிற நொய்மையும்
சேர்ந்தே இருப்பது
எனக்குத் தெரியும்
சூரியத் தீண்டலும் சந்திரத் தொடுதலும்
பட்டுத் தெறிக்கும் பிரகாசமன்றி
மாயமான் தளுக்குகள் என்னிடமில்லை
கரையில் இருந்தே
கடலென்று சொல்லிப் போனவர்களும்
கால்வாய் என்று கைகழுவியவர்களும்
இதுவரை எனக்கு
நியாயம் சற்றும் வழங்கவே இல்லை
என் அடிவயிற்றில்
மரபுத் தாமரையின் தொப்பூழ்
என் தீர்த்தக் கரையில்
புதிய பறவைகளின் சங்கீதம்" - சிற்பி
"சரித்திரம் சுழலும்போதும்
சமுத்திரம் குமுறும்போதும்
பொருத்தவள் பொங்கும்போதும்
புயல்மழை சீறும்போதும்
பறித்தவள் ஆதிக்கத்தைப்
பசித்தவன் எதிர்க்கும்போதும்
மறித்தவன் வென்றதில்லை
மறுப்பவன் நின்றதில்லை"
"கோழியே
வானத்தைப் பார் நிமிர்ந்து
வல்லூறுப் பறவை ஒன்று
பூனைப் போல் கூர்ந்த கண்கள்
புலி நகம் இவற்றால் சின்னச்
சேனையாம் உனது குஞ்சுச்
சிமிழ்களை விழுங்குப் பார்க்கும்
..................,,........................................
உறவுகள் நமக்குள் ஒன்று!
உயிர்களைக் காக்கும் போரில்
சிறகுகள் பறிபோனாலும்
சீறுவாய் கோழி! வாழி!
...........................................................
போராடிப் பெற்றவற்றைப்
போராடி மீட்க வேண்டும்;
போராடி மீட்டவற்றைப்
போராடி காக்க வேண்டும்
போராடும் வழியை விட்டால்
புதுவாழ்வு என்பதற்கு
வேறென்ன வழி உனக்கு
விடியலைக் காண்பதற்கு?
"அமைதியின் பேரால் இன்னும்
எத்தனை ஆண்டுக் காலம்
இமை மூடிக் கிடக்க வேண்டும்?
எண்ணினேன்; எண்ணும்போதே
குமுறினேன்; கொந்தளித்தேன்
கொடுங்கோலின் பிடியை மீறத்
திமிறினேன்; இதனை வீழ்த்தத்
திறனில்லா வரை நமக்குத்
தமிழும் ஏன்? இலக்கியம் ஏன்?
சரித்திரப் பெருமைகள் ஏன்?
நொடிக்கொரு சட்டமிட்டு
நொறுக்கிடும் ஆதிக்கத்தின்
கொடிக்கு இங்கே நாட்டை ஆளும்
கொற்றம் ஏன்? கோட்டைகள் ஏன்?
அடித்திடச் சீறுகின்ற
ஆற்றலால் வர்க்கமே,நீ
வெடித்திடும் முழக்கம் எங்கே?
வெறி எங்கே? தூங்கும் போதும்
துடித்திடும் தோள்கள் எங்கே?
துரோகத்தைத் தூள் படுத்திப்
பொடித்திடும் தடக்கை எங்கே?
போர் எங்கே? என்று சேனை
நடத்தியும் தாள்கள் எங்கே
நரம்பெங்கே? நாளமெங்கே?
அறுத்தெறி தளையை! இந்த
அடிமைச் சங்கிலியைத் தூளாய்
உடைத்திட வா!வா! என்று என்
உதிரமே கொப்பளிக்க
அழைக்கிறேன் தோழா! உன்னை
அணைக்கிறேன் வாராய்! வாராய்!"
"மரபு - புதுசு-
இரண்டிலும் கனி உண்டு;
இரண்டிலும் சருகு உண்டு.
சருகுகளை மிதித்துச் சென்று
கனிகளைப் பறித்தெடுப்போம்
சருகுகளைக் காற்று
பெருக்கித் தள்ளிவிடும்
காலக் காற்று."
"கணவனைப் பறித்ததாலே
கண்ணகி சீற்றம் நியாயம்;
துணியினைப் பறித்ததாலே
திரௌபதி சபதம் நியாயம்;
மனைவியை இழந்ததாலே
ராமனின் யுத்தம் நியாயம்
அனைத்தையும் இழந்த எங்கள்
ஆவேசம் நியாயம்! நியாயம்!"
"பாட்டுத்தான் ராகத்தின் தாய்;
பாவம்தான் பரதத்தின் தாய்;
ஊற்றுதான் நதிகளின் தாய்;
உழைப்புதான் உலகத்தின் தாய்;
நேற்றுதான் இன்றையின் தாய்;
மாற்றமே புதுமையின் தாய்;
வறுமைதான் புரட்சியின் தாய்;"

0 கருத்துகள்