கஸ்தூரியைத் தேடி அலையும் மான்
என் அழுகை
சூரியனை நனைத்தது
என் கண்ணீர்த் துளிகள்
விழுந்த இடத்தில்
நட்சத்திரங்கள் பூத்தன .
நட்சத்திரங்களையும்
பூக்களையும்
ஒரே மாலையாகத் தொடுத்தவன்
என் கண்ணீர்த் துளிகளையும்
சேர்த்துத் தொடுத்தான் .
என் சூரியனுக்கு
உதயம் மட்டுமே உண்டு
அஸ்தமனம் இல்லை
என் அணுவில்
அண்ட சராசரங்கள்
சுழல்கின்றன
எனக்குள்
எனக்கே தெரியாத
ரகசியங்கள்
புதைந்து கிடக்கின்றன
வசந்தத்தின் ஸ்பரிசம்
படுவதற்கு முன்பே
என் பூங்கா
மலர்ந்துவிடுகிறது.
பூக்கள் சொல்ல முடியாத
பேருண்மைகளை
என் பாக்கள் சொல்கின்றன
என்னிலிருந்து எழுந்த
இசையைக் கேட்டு
இசைக் கருவிகள் எல்லாம்
ஊமையாயின
இசைத் தேவதையே
என் பாடல்களைக் கேட்டு
வியந்தாள்.
கண்ணுக்குத் தெரியாத
ஒரு சூரியனின்
கிரணத்தைப் போல்
நான் இந்த உலகிற்கு
வந்திருக்கிறேன்
என்னை
நானே அறியவில்லை
என்னைத் தேடுவதில்
நான் என்னைத்
தொலைத்து விட்டேன்
தனக்குள் இருக்கும்
கஸ்தூரியைத்
தேடி அலையும்
மான் நான்
தேடல்
எனக்கு
விதிக்கப்பட்டிருந்தது
என் மொழியைப்
புரிந்து கொள்ளும் செவிகளை
நான் யாசிக்கிறேன்
இந்தச் சந்தையில்
என் சரக்குக்கு
மதிப்பு இருக்காது என்பது
எனக்குத் தெரியும்
நான் விற்பதற்காக
வரவில்லை
கொடுப்பதற்காக
வந்திருக்கிறேன்
ஆனால்
வாங்குவோர்
யாருமில்லை
காட்டுத் தீயைப் போல்
நான் பற்றிக்கொண்டேன்
என்னை அணைப்பது
எளிதன்று
புயலில்
தத்தளிக்கும் படகும்
நானே
கலங்கரை விளக்கும்
நானே
எந்த இடம் என்று
தெரியாத இடத்திலிருந்து
நான் பயணம் புறப்பட்டேன்
பயணமும்
என் விருப்பமல்ல
நான் பயணியாகப்
படைக்கப்பட்டிருக்கிறேன்
நான் போய்ச் சேருமிடம் எது
அதுவும் எனக்குத் தெரியாது
இந்த வாழ்க்கையில்
வீடுகளும் சத்திரங்களே
வழிப் பயணத்தில்
வந்து சேர்ந்து கொள்வோரைப் போல்
மனைவி,மக்கள்,உறவெல்லாம்
உறவுகள்
அவரவர் ஊர் போய்ச்
சேரும் வரைதான்
போய்ச் சேரும் ஊர்களும்
இலட்சியங்களல்ல
அவையும் சத்திரங்களே
ஒவ்வொருவரும்
வெவ்வேறு ஊருக்குப்
போவதாக நினைக்கிறார்கள்
ஆனால்
எல்லோரும் போவது
ஒரே ஊருக்கே
பாதைகள் வெவ்வேறானாலும்
அவை அனைத்தும்
ஒரே ஊரையே
அடைகின்றன
இதை அறியாத மூடர்
தங்கள் பாதையே
சிறந்ததென்றும்
தங்கள் பயணமே
வெற்றியில் முடியும் என்றும்
சண்டையிடுகின்றனர் .
சிலர் பாதையிலேயே
படுத்துக் கொள்கிறார்கள்
சிலர்
வழிகாட்டி மரங்களையே
ஊர் என்று நினைத்துத்
தங்கிவிடுகிறார்கள்
நான்
ரோஜா மலராக இருக்கிறேன்
என்மீது விழும்
ஒவ்வொரு பனித்துளியும்
வானத்தின் ரகசியத்தை
எனக்குச் சொல்கின்றது
நான்
நேற்றின்
சமாதியுமல்லன்
இன்றின்
வீடுமல்லன்
நான்
நாளையின் குரல்
நான்
ஒரு மகா சமுத்திரத்தின் துளி
என்பதை அறிவேன்
எனக்குள்
சமுத்திரத்தின்
மாதிரி இருக்கிறது
சமுத்திரமே இல்லை
துளி மீண்டும்
சமுத்திரத்தில் கலந்துவிட்டால்
காணாமல் போய்விடும்
துளியாய்ச்
சமுத்திரத்தைப் பிரிவதும்
மீண்டும் அதில் கலப்பதும்
என் விதியில்
எழுதப்பட்டுள்ளது
நான்
அனுமதிக்கப்பட்ட மதுவை
அருந்துகிறேன்
காதல் மது
உலகத்தில்
ஏமாற்றிய காதலியை
மறப்பதற்காக
மது அருந்துவார்கள்
நான் என் காதலியை
நினைப்பதே
போதை ஏற்றிவிடுகிறது
போதை எறியவர்களுக்கு
ஒன்று இரண்டாகத் தெரியும்
எனக்கோ
எல்லாம் ஒன்றாய்த் தெரிகிறது
எளிதில் கிடைப்பவள்
காதலி அல்லள்
என் காதலி
ஏழு கடல்களுக்கு
அப்பால் இருக்கிறாள்
வீர தீர பராக்கிரமங்களாலும்
சாகசங்களாலும்
நான் ஏழு கடல்களைத்
தாண்டுவேன்
கண்ணீரின் ரகசியம்
'இறைவா எனக்குப்
புன்னகைகளைக் கொடு' என்று
பிரார்த்தித்தேன்
அவன் கண்ணீரைத் தந்தான்
'வரம் கேட்டேன்
சாபம் கொடுத்து விட்டாயே'
என்றேன்
இறைவன் கூறினான்
'மழை வேண்டாம்
விளைச்சலை மட்டும் கொடு' என்று
எந்த உழவனாவது கேட்பானா'
ஆனால் நீ
அப்படித்தான் கேட்கிறாய்
கண்ணீரில் புன்னகையும்
புன்னகையில் கண்ணீரும்
ஒளிந்திருப்பதை
நீ அறிய மாட்டாய்
உண்மையைச் சொல்வதானால்
கண்ணீர் கண்களின் புன்னகை
புன்னகை இதழ்களின் கண்ணீர்'
வைகறைப் பொழுதில் மலர்களின் மீது
பனித்துளிகளை
நீ கண்டதில்லையா?
புன்னகை
தன்னைக் கண்ணீரால்
அலங்கரித்துக் கொள்ளும்
அற்புதம் அல்லவா அது!
மழை மேகங்களில்
மின்னல் உதிப்பதை
நீ பார்த்ததில்லையா?
கண்ணீரில் இருந்து
சிரிப்பும் பிறக்கும்
அழகல்லவா அது?
முத்து என்பது என்ன?
சிப்பிக்குள் இருந்து
தவம் செய்யும் கண்ணீர்த் துளி
புன்னகையாகும் அதிசயம் தானே அது
கண்ணீரில் மலரும்
புன்னகைப் பூக்கள்
வாடுவதில்லை என்பதை
அறிவாயாக!
மேலும்
கண்ணீர்தான்
உன்னைக் காட்டுகிறது
புன்னகையோ
சில நேரங்களில்
உனக்கு திரையாகிவிடுகிறது.
செம்மொழி
ஒலிக்கடலில் முதன் முதலாய்
உதித்து வந்த பேரலையே
கலைக்கடலை நாவினால்
கடையவந்த செவியமுதே!
பிறந்தநாள் அறியாத
பேரழகே! பிறமொழிகள்
இறந்தநாள் காண நிதம்
இளமை பெற்று வந்தவளே
நயந்த மொழிகளிங்கு
நாலாயிரமிருந்தும்
உயர்ந்தவளே! உன்னைப்போல்
உயிர்மெய் யோடிருப்பவர் யார்?
வல்லினமும் மெல்லினமும்
வளமான இடையினமும்
நல்லினமாய் ஒன்று பட்டு
நடக்க வழி செய்தவளே!
உயர்மொழி நீ!
தனிமொழி நீ!
உன்னதமாம் செம்மொழி நீ!
உயிர்மொழி நீ!
மெய்மொழி நீ!
உயர்வைத் தருபவள் நீ!
முதியவளாய் இருந்தாலும்
மோகம் தரும் அழகால்
புதியவளாய் இருப்பவளே
பூவைபோல் மலர்பவளே!
கன்னியென்பார் உனை நீயோ
கனிப்பிள்ளை பல பெற்ற
அன்னை !
இது என்ன அதிசயம் எனக்கேட்டால்
கன்னி அன்னை நீ
அந்தக் கன்னி மரிபோல
அன்னவர்க்கோ ஓர் ஏசு
உனக்கோ பல ஏசு
வைதாலும் தித்திக்கும் மதுரமே!
காலக்கை
கொய்தாலும் மலர் வளத்தில்
குறையாத பூவனமே!
நில்லாத காற்றைப் போல்
நிமிர்கின்ற ஒளியைப் போல்
எல்லோர்க்கும் பொதுவாக
இருப்பவளே உன்னை நாம்
உச்சரிக்கும் போதிலே
ஊறுகின்ற வாயதன்
எச்சிலும் தேனாகும்
இதழ்களும் பூவாகும்
பாடையிலே ஆடையிலே
படிப்படியாய் செழித்தவள் நீ!
முப்பதே ஒலிகளுக்குள்
முழுவுலகம் அளப்பவளே!
ஒப்பே இல்லாத
உயர்குறளை பெற்றவளே!
வலஞ்சுழி தேடுகின்ற
வாக்கிய நதியே!
நலஞ்செழித் தோங்குகின்ற
நாணய நா நயமே!
எம்மொழிக்கும் மூத்தவளே!
எம்மொழியாய் வாய்த்தவளே !
செம்மொழியாய் மொழிகளுக்குள்
செம்மாந்திருப்பவளே!
சேய்கள் பிரசவித்த
தாயே ! உயர்ந்த மேல்
வாய்கள் பிரசவித்த
வார்த்தை வசந்தமே!
சமண பவுத்தச்
சமயத் துறவிகளும்
தமது மொழி என்று
தாலாட்ட வளர்ந்தவளே!
தேவாரம் தொடுத்தவளே!
திருவாசகத் தேனே!
நாவார ஆழ்வாரின்
நயங்களில் ஆழ்ந்தவளே !
ஏசு மதத்தார்
ஈந்ததொரு கொள்கையினால்
ஏசா மதத்தை
எம் தமிழர்க் களித்தவளே !
மக்கா மதீனாவின்
மக்காத கொள்கையுடன்
நிக்கா முடித்தவளே !
நேயம் வளர்த்தவளே !
மதம் மாற்ற வந்தவரை
மதம் மாற்றி வைத்தவளே!
நிதம் மாற்றம் பெற்றிங்கு
நித்தம் வளர்பவளே!
இமயத்தில் கொடியேற்றி
இறுமாந்திருந்தவளே!
சமயங்கள் அனைத்தையும்
சமமாக மதித்தவளே !
உன்னாலே பிறந்தோம்
உன்னாலே வளர்ந்தோம்
உன்னாலே பெருமை பெற்று
உலகத்தில் வாழ்கின்றோம்
அகம் நீ
புறம் நீ எம்
ஆருயிரும் நீ
எங்கள் முகம் நீ
முகவரி நீ
முடியாத புகழும் நீ
இந்தியா ஒரே நாடா?
ரத்தம்
எனக்கு மட்டும்தான்
சொந்தம் என்று
இதயம் சொன்னால்
உடல் என்ன ஆகும்?
திருமணமான பிறகும்
பெண்
பிறந்தகத்தில் தான்
இருக்க வேண்டும்
என்று சொன்னால்
கணவன் கதி என்ன?
எனக்கொரு சந்தேகம்
கர்நாடகம்
இந்தியாவில் தான் இருக்கிறதா?
தமிழ்நாடும்
இந்தியாவில் தான் இருக்கிறதா?
இந்தியா என்பது
ஒரே நாடுதானா?
தொலைந்து போனவர்கள்...
விடிந்ததென்பாய் நீ அனுதினமும் -வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை - இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை
மணந்தேன் என்பாய் சடங்குகளும் - வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் - உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல
கற்றேன் என்பாய் கற்றாயா ? - வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய் ? - வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல
அளித்தேன் என்பாய் உண்மையிலே - நீ
அளித்த தெதுவும் உனதல்ல
உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் - வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் - ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்
தின்றேன் என்பாய் அணு அணுவாய் - உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் - பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்
ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் - உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்து விட்டாய் - உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடனாய்
'நான்' என்பாய் அது நீயில்லை - வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
'ஏன்'? என்பாய் இது கேள்வியில்லை - அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?
பாருக்குள்ளே நல்ல நாடு
அவர்களைச் சிறையில்
சந்தித்தேன் .
"என்ன குற்றம் செய்தீர்கள்"
என்று கேட்டேன்.
ஒவ்வொருவராகச்
சொன்னார்கள். ..
எங்கள் வீட்டில்
திருடிக்கொண்டு ஒருவன் ஓடினான்.
" திருடன் திருடன்" என்று கத்தினேன்.
அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக என்னைக்
கைது செய்து விட்டார்கள்.
"என் வருமானத்தைக் கேட்டார்கள்"
"நான் வேலையில்லா பட்டதாரி" என்றேன்.
வருமானத்தை மறைத்ததாக வழக்குப்
போட்டு விட்டார்கள்.
"நான் கரி மூட்டை தூக்கும் கூலி"
கூலியாக கிடைத்த ரூபாய் நோட்டில்
கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது.
கறுப்பு பணம் வைத்திருந்ததாகக்
கைது செய்து விட்டார்கள்.
"என் வயலுக்கு வரப்பு எடுத்துக்
கொண்டிருந்தேன் பிரிவினைவாதி என்று
பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்."
"அதிகாரி லஞ்சம் வாங்கினார், தடுத்தேன்.
அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச்
செய்ய விடாமல் தடுத்ததாகத்
தண்டித்து விட்டார்கள்.”
“அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படச்
சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன்.
சட்டமன்ற உறுப்பினர்களை அவதூறு செய்ததாக
அழைத்துக் கொண்டு
வந்து விட்டார்கள்”.
வறுமைக் கோட்டை அழிப்போம்” என்று
பேசினேன். அரசாங்க சொத்தை அழிக்கத்
தூண்டியதாக அடைத்துப்போட்டுவிட்டார்கள்”
“ஊழல் பேர்வழிகளை நாடு கடத்த வேண்டும்”
என்று எழுதினேன்,“கடத்தல்காரன்” என்று
கைது செய்து விட்டார்கள்.
“நான் பத்திரிக்கை ஆசிரியன். தலையங்கத்தில்
உண்மையை எழுதினேன். நாட்டின்
ஸ்திரத் தன்மையைக் குலைத்ததாகக் கொண்டு
வந்து விட்டார்கள்”
“சுதந்திர தின விழாவில்
‘ஜன கண மன’ பாடிக் கொண்டிருந்தார்கள்.
நான் பசியால் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தேன்.
எழுந்து நிற்க முடியவில்லை.
தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாகச்
சிறையில் அடைத்து விட்டார்கள்”
“அக்கிரமத்தை எதிர்த்து
ஆயுதம் ஏந்தச் சொன்னான் கண்ணன்”
என்று யாரோ கதாகாலட்சேபத்தில்
சொல்லியிருக்கிறார்கள்
என்பெயர் கண்ணன்.
“பயங்கரவாதி” என்று என்னைப் பிடித்துக்
கொண்டு வந்து விட்டார்கள்.
நான் வெளியே வந்தேன்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எதுவும் இல்லாமல்
நாடு அமைதியாக இருந்தது..

0 கருத்துகள்